நூல் அறிமுகம்
கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் (வே.தங்கவேலு) எழுதியுள்ள சோதிடப் புரட்டின் நூல் வெளியீட்டு விழா கனடாவில் கடந்த சனிக்கிழமை (08.09.07) எழுச்சியோடு நடைபெற்றது.

பாரதியார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்தை அபிராமி தங்கவேலு, நிலா தங்கவேலு இருவரும் பாடினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இளைய இனிய உயிர்களை ஈகை செய்த மாவீரர்களுக்கும், இந்திய - சிறிலங்கா அரசுகளின் பயங்கரவாதத்துக்குப் பலியான பொதுமக்களுக்கும், ஆழிப்பேரலை காவுகொண்ட பொதுமக்களுக்கும், தமிழ்மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தமிழ்ச் சான்றோர் ஆகியோருக்கும் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

வாசு சின்னராசா ஆசிரியரின் மாணவிகள் சரணியா விவேகானந்தன் மற்றும் சிந்தூரா ஆனந்தராசா "தமிழே வாழ்க்! தமிழ் அன்னையே வாழ்க! ஈழமண்ணே வாழ்க!" என்ற எழுச்சிப் பாடலுக்கு வரவேற்பு நடனம் ஆடினர்.





தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் செயலாளர் பவானி தர்மகுலசிங்கம் வரவேற்புரையாற்றினார்.

அண்டத்தின் தோற்றம், பெருவெடிப்பு பற்றிய விளக்கம், ஞாயிறு மண்டலத்தின் தோற்றம், அதனைச் சுற்றி வலம் வரும் கோள்கள் பற்றிய விளக்கம், ஞாயிறு மறைப்பு மற்றும் சந்திர மறைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், சனிக்கோள் பற்றிய விளக்கம் எனப் பல வானியல் தரவுகளுடன் ஒளிப்படம் திரையிடப்பட்டது. இந்த ஒளிப்படத்தை திருமகள் பாலகுமார் வடிவமைத்திருந்தார்.

நூலாசிரியர் நக்கீரன் பற்றிய அறிமுகவுரையை இரா.குணநாதன் நிகழ்த்தினார். "உலகத் தமிழர்" செய்தி இதழில் அரசியல் பலகை, இலக்கியப் பலகை என நக்கீரன் எழுதிய அரசியல் மற்றும் இலக்கியக் கட்டுரைகளை அவர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகாலம் உலகத்தமிழர் இயக்கத்தில் துணைத் தலைவராகவும் கனடிய தமிழர்களின் பேரவையில் தலைவராகவும் நக்கீரன் பணியாற்றியதனையும் அவர் நினைவு கூர்ந்தார்.





"முழக்கம்" பொறுப்பாசிரியர் வானதி, தமிழ்க் கலை நுட்பக் கல்லூரி நிறைவேற்று இயக்குநர் சண்முகம் குகதாசன் ஆகியோர் "சோதிடப் புரட்டு" நூல் பற்றிய ஆய்வுரை வழங்கினர்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனுக்கு சிறப்புச் செய்யப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் குணநாதன், தமிழ் ஈழச் சங்கத்தின் தலைவர் விநாசித்தம்பி துரைராஜா, கலை, தொழில்நுட்பக் கல்லூரித் தலைவர் கந்தையா கணேசலிங்கம், ஆகியோர் ஈழவேந்தனுக்கு மாலைகள் அணிவித்தனர்.





உலகத் தமிழர் இயக்கத் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத் துணைத் தலைவர் கார்த்திகேசு சிவசேகரம் ஆகியோர் ஈழவேந்தனுக்கு பொன்னாடை அணிவித்தனர்.

ஈழவேந்தனுக்கு கனேடிய தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் நினைவுப் பரிசு வழங்கினார்.

"முழக்கம்" ஆசிரியர் திருமுருகவேந்தன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். மா.க.ஈழவேந்தன் சிறப்புரை நிகழ்த்தினார்.

நூலாசிரியரைப் பாராட்டி கவிஞர் ரூபன் ரட்ணதுரை, கவிஞர் அனலை இராசேந்திரம், கவிஞர் இராசலிங்கம், கவிஞர் சின்னத்தம்பி சண்முகராசா ஆகியோர் கவிதை வாசித்தனர்.

நிகழ்வில் "யார் குழந்தை" என்ற நாடகம் மேடையேறியது. இந்த நாடகம் சோதிடப் புரட்டில் வரும் "ஜாதகக் குழந்தை" என்ற உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது. நாடகத்தை சிவம் பரமநாதன் நெறியாள்கை செய்தார்.

இறுதியாக நூலாசிரியர் நக்கீரன் ஏற்புரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினார்.

"சோதிடப் புரட்டு" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தடைபல தாண்டி ரோக்கியோ வழியாக கனடா வந்த சிறப்பு விருந்தினர் மா.க.ஈழவேந்தனுக்கு நூலாசிரியர் தனது நெஞ்சார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.