அல்லையூர் சி.விஐயனின் கவிதைகள்
விடுதலை வேண்டும் தோழி


விடுதலை வேண்டும் தோழி
இந்த வடு
நீங்கிட வேண்டும் நீ வாரீர்!


வந்தது விடுதலையென்று பாடு-நீ
வந்தது விலங்கொடிக்க எனக் கூறு!
சந்ததி வந்தது உன்னதனாலே-இனி
சரித்திரம் எழுத எழு பெண்ணே நீயே!


வெந்தது பெண்ணுடல் சீதனக்
கொடுமைய தனாலே
வேண்டும் விடுதலை என்று நீ பாடு-ஒரு
வேள்விக்கு நீ தயாராகு!


போதும் போதும் பேதமையின்
பேய்கள் விரட்டும் ஊருக்குள்ளே-ஒரு
யாகம் செய்ய புறப்படு பெண்ணே
பெரும்பேறு கொள்வாய் வந்திடு முன்னே!


(விடுதலை)


ஆளான நாள் முதலாய் ஆனவதை
போதுமென்று!
நாளாக நாளாக நாம்பட்ட துன்பங்கள்
தூணாகித் தூணாகி பெரும் சீனச் சுவராச்சு!


அச்சம் மடம் நாணம் வெட்கம் பயிர்ப்பு என்று
பட்டம் தந்த பெரியோர்கள்
மட்டம் தட்டியல்லவா எமைப்
புதைத்து விட்டார்கள்!


ஆதியும் அந்தமும் பெண்ணென்று சொல்
அதை மறுப்பவன் முகத்தில் உமிழ் நீரை வை!
சதியும் பதியும் சமமென்று சொல்
சரித்திரம் எழுத துணிவோடு செல்!


(விடுதலை)


ஆணாதிக்கத்திற்கு அஞ்சி அழுகி வாழ்ந்து
அடுப்பங்கரைப் பூனையென்று
உலகம் புனைப் பெயர் சூட்டி
போற்றிக் கொண்டதெல்லாம் போதும்!


சீதனக் கொடுமை என்றும்
வேதனம் வேதனை என்றும்!
கண்ணீரோடு காலம் கடத்தி
தண்ணி போட்டுவரும் கணவனுக்கு
மத்தளமென்று உருமாறி


மாமி, மச்சாள்
மணமகன் வீட்டு
மாடும் எட்டி உதைத்து ஏளனம் செய்யும்
கொடுமைகள் போதும் போதும்!


(விடுதலை)


துயரங்கள் சுமந்து வாழ்ந்தது போதும் இனி
துன்பங்கள் நீக்கி வாழ்ந்திட நீயும்
வஞ்சகம் விட்டு வா பெண்ணே-இது
வஞ்சகர் வாழும் உலகமன்றோ!


நெஞ்செல்லாம் நித்தம் எம்
பெண்ணைத் தொட்டவர் உடலை
வெட்டிடத் துடிக்குதடி பெண்ணே
அந்த வேளை நெருங்குதடி கண்ணே!


பூட்டிய சிறையை உடைத்திடு பெண்ணே
இந்த உலகுக்கு புது வழி சமைத்திடு நீயே!
அடுப்படிக்குள் அடங்கிக் கிடந்த காலமெல்லாம்
படிப்படியாக உடைத்து அரங்குக்கு வா வா நீயே!



கவிஞர் அல்லையூர் சி.விஜயன்